“நீர் மேலாண்மையில் தமிழக அரசு எந்த ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் செயல்படுத்தாத காரணத்தினால்தான் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்” என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் தலைவர் சவுமியா அன்புமணி, அணையின் நீர்தேக்கப் பகுதிகளையும், உபரி நீர் போக்கி அமைந்துள்ள 16 கண் மதகுப் பகுதியையும் இன்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா அன்புமணி கூறும்போது, “நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து பார்த்தபோது, வறட்சியாக இருந்தது. மாதாந்திர அட்டவணைப்படி கர்நாடக மாநிலம், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிமை நீரை, வழங்காததே அதற்குக் காரணம். தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த காரணத்தினால் கர்நாடக அணைகளில் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
ஒவ்வொரு முறையும் முழு கொள்ளளவை எட்டும் நேரத்தில் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதை பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், தமிழக அரசு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட சேகரித்து வைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரியின் குறுக்கே 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும். அப்படிக் கட்டினால் 50 முதல் 70 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு எந்த ஒரு தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்தாத காரணத்தினால்தான் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேட்டூர் அணை நிரம்பினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதும், மேட்டூர் அணை வறண்டால் பயிர்கள் காய்ந்துபோவதும் வாடிக்கையான ஒன்றாக இதுவரை நீடித்து வருகிறது. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து, கடலில் சென்று வீணாக கலக்கும் தண்ணீரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வறண்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீரும் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உபரி நீர் முறையாக பயன்படுத்தப்படாததால் தான் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகா முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படும்” என்று சவுமியா அன்புமணி கூறினார்.