நாட்டின் எந்த மாநிலமும் பின்தங்குவதை நான் விரும்பவில்லை : தொழில்துறை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

முதலீட்டை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்றும், நாட்டின் எந்த மாநிலமும் பின்தங்குவதை நான் விரும்பவில்லை என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில், ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கியப் பயணம், மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “தொற்றுநோய்களின் போது, நாம் விவாதங்களை நடத்தினோம். வளர்ச்சியை நோக்கி மீண்டும் பயணிக்க வேண்டும் என்பதே அந்த விவாதங்களின் மைய புள்ளியாக இருந்தது. வளர்ச்சிக்கான பாதையில் இந்தியா மிக விரைவாக வேகமாக பயணிக்கும் என்று நான் அப்போது சொன்னேன். இன்று இந்தியா 8% வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் ஓடுகிறது.

தற்போது நமது விவாதங்களின் மையப் புள்ளி மாறி இருக்கிறது. இன்று நாம், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் குறித்து விவாதிக்கிறோம். இந்த மாற்றம் வெறும் எண்ணத்தால் ஏற்பட்டதல்ல, நம்பிக்கையால் ஏற்பட்டது. இன்று இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் அது 3 வது இடத்தைப் பிடிக்கும்.

மூலதனச் செலவு என்பது, வளர்ச்சிக்கான மிக முக்கிய முதலீடு என்று அழைக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டில், மூலதனச் செலவு சுமார் ரூ. 90,000 கோடியாக இருந்தது. பின்னர், அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால், இன்று மூலதனச் செலவு ரூ. 11 லட்சம் கோடிக்கும் அதிகம்.

2014க்கு முன் லட்சக்கணக்கான கோடிகளில் நடந்த ஊழல்கள் குறித்து அனைவரும் அறிவார்கள். பொருளாதாரம் பற்றிய விவரங்களை வெள்ளை அறிக்கையாக தேசத்துக்கு முன்வைத்தோம். நாம் எந்த இடத்தில் நின்றோம் என்பது விவாதத்திற்குரியது. நாங்கள் இந்தியாவின் தொழில்துறைகளை விடுவித்து, அவற்றை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ரயில்வேக்கான நிதி ஒதுக்கீட்டை நாங்கள் 8 மடங்கு உயர்த்தி உள்ளோம். இதேபோல், நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 8 மடங்கும், விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 4 மடங்கும், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை இரண்டு மடங்கும் உயர்த்தி இருக்கிறோம்.

2014ம் ஆண்டுக்கு முன், நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்று காட்டுவதற்காக பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த அறிவிப்புகள் களத்தில் செயல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம். முந்தைய அரசுகள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலையை நாங்கள் மாற்றியுள்ளோம்.

நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த உலகில், இந்தியாவைப் போல் வளர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் இருப்பது விதிவிலக்கு. அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்தைக் கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. நமது நிதி விவேகம் உலகிற்கே முன்மாதிரி. உலக அளவில் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16%. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பலமுறை நாம் அடிபட்டிருக்கிறோம். இருந்தும் இது நடந்தது. இந்த சவால்கள் வராமல் இருந்திருந்தால் இந்தியா இன்னும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கும்.

இந்த பட்ஜெட்டில் பிரதமர் தொகுப்பு ரூ. 2 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி இளைஞர்கள் பயனடைவர். இந்த பிரதமர் தொகுப்பு முழுமையானது மற்றும் விரிவானது. இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. இது முழுமையான தீர்வை தரவல்லது.

உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு நேர்மறையாக இருக்கிறார்கள். முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநிலமும் மேற்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்களிடம் கூறினேன். முதலீட்டை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். எனது நாட்டின் எந்த மாநிலமும் பின்தங்குவதை நான் விரும்பவில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, வளர்ச்சியை நோக்கிய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வை குறித்தும், அதற்கான முயற்சியில், தொழில்துறையின் பங்களிப்பு குறித்தும் விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக அதிகாரிகள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.