கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வாசகர் பேரவை இணைந்து டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி 139ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக இன்று நடத்தினர்.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் மா.குமுதா, முதல்வர் முனைவர் செ.கவிதா, மக்கள் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் வாசகர் பேரவையின் செயலர், சா.விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக குடிமைப்பணித் தேர்வின் வெற்றியாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் காரைக்குடி ப.அஞ்சுகா கலந்து கொண்டு முத்துலெட்சுமி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பேசியது, நான் பள்ளியில் படிக்கும் போதே ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் அமுதா ஐ.ஏ.எஸ். பெண்கள் விரும்பாத பாடமான அரசியல் அறிவியல் பாடத்தை எடுத்துப்படித்தேன்.
அழகப்பா கல்லூரியில் பி.காம் படிக்கும் போதே இந்தத் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினேன். கல்லூரியில் போட்டித் தேர்வு தொடர்பாக நடைபெறும் வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்பேன். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற நாள் தோறும் 8 முதல் 10 மணி நேரம் படிக்க வேண்டும். நான் சில காலமே பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன் பின்னர் வீட்டிலிருந்தே இணையவழி மூலமாக படித்தேன். பயிற்சி மையத்தில் சேராமல் வெற்றி பெற்றவர்கள் உண்டு. குடிமைப் பணித் தேர்வுக்கு படிக்கிறவர்கள் செல்போனை தூரவே வைத்திருக்க வேண்டும். நான் அதைத் தூரமாகவே வைத்திருந்தேன். வெற்றி எனக்கு விரைவாகக் கிடைத்துவிட்டது.
என்னோடு ஐஐடியில் படித்தவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் ஒரு போதும் என்னை தாழ்வாக எண்ணிக் கொண்டதில்லை. போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு பணம் மற்றும் மொழி ஒரு தடையல்ல. தடையாக இருப்பது தேர்வைப் பற்றிய அச்சமும், பயமுமே. நான் ஒருபோதும் தேர்வைப் பார்த்து அச்சப்பட்டதில்லை. நீங்களும் தேர்வைப் பற்றிய அச்சங்களை விட்டு விடுங்கள். செய்தித்தாள் வாசிப்பு, புத்தக வாசிப்பு மிக மிக அவசியம். இது நமக்குத் தேவையான அனைத்தையும் தருகிறது. நல்ல கற்பனையையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. அதே போல படிப்பதை எழுதிப்பார்க்கும் பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழாவில் பேச எனக்கு வாய்ப்பு தந்தது நான் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐ.எப்.எஸ் ஆக போவதுதான். நீங்களும் அந்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக வரலாறு துறைத்தலைவர் மு.முத்துலெட்சுமி வரவேற்றார். முடிவில் உதவிப்பேராசிரியர் எஸ்.சிவபாரதி நன்றி கூறினார்.