சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு நோக்கி பாதயாத்திரை : பாஜக, மஜத அறிவிப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தை கண்டித்து பாஜக, மஜதவினர் மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று (திங்கள்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் வழங்கிய விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், சித்தராமையா பதவி விலக வலியுறுத்தியும் பாஜக, மஜத கூட்டாக இணைந்து பாதயாத்திரை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூருவில் இந்த யாத்திரை தொடங்கி 7-ம் தேதி மைசூருவை அடையும். இந்த யாத்திரையில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 7-ம் தேதி மைசூருவில் பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசிய தலைவர்களும், மஜதவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர் என்று எடியூரப்பா தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாஜக, மஜதவினரின் தொடர் போராட்டத்தால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.