காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : கவுன்சிலர்கள் வராததால் தப்பிய பதவி

காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்த ஆணையர் செந்தில்முருகன், “தீர்மானம் வெற்றிபெறவில்லை” என்று சொல்லி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி பதவியேற்றதில் இருந்தே பிரச்சினைகளை எதிர்கொண்டார். கடந்த சில மாதங்களாக கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. திமுக கவுன்சிலர்களே மகாலட்சுமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

தங்கள் வார்டுகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை என்று பல்வேறு கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் பல கூட்டங்களில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கட்சி பேதமின்றி ஓரணியில் நின்று எதிர்த்ததால் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழல் கூட ஏற்பட்டது. இப்படி மேயர் – கவுன்சிலர்கள் மோதல் வலுத்து வந்த நிலையில் கணக்கு குழு, நிதிக் குழு உட்பட பல்வேறு நிலைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த பலகட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 7-ம் தேதி திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என 33 கவுன்சிலர்கள் அணி சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர். அந்த மனு சரிவர இல்லை என்று கூறி ஆணையர் செந்தில்முருகன் அதை திருப்பி அனுப்பினார். இந்நிலையில் மீண்டும் திருத்தப்பட்ட மனுவை கவுன்சிலர்கள் அளித்தனர். மாநகராட்சி ஆணையர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர தாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆட்சியரிடமும் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாக அவர்கள் தெரிவித்த நிலையில், மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஜூலை 29-ம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்தார் ஆணையர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு முன்பாகவே ஆணையர் செந்தில்முருகன் மற்றும் அதிகாரிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த காஞ்சிபுரம் அண்ணா அரங்குக்கு வந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 41 கவுன்சிலர்கள் வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றிபெறும். இந்நிலையில், திடீர் திருப்பமாக இன்றைய கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. 35-வது வார்டு திமுக உறுப்பினர் பிரவீன்குமார் மட்டுமே வந்திருந்தார். அவரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. மாறாக, மாநகராட்சி மேயரை பதவி நீக்கம் செய்யும்படி ஆணையரை அரசுக்கு பரிந்துரை செய்யக் கோரியும், ஆணையர் மீது பல்வேறு குறைகளைக் கூறியும் மனு அளித்தார். அந்த மனுவை ஆணையர் வாங்காததால் அவர் அமர்ந்திருந்த மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார்.

காலை 11.30 மணி ஆகியும் கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் யாரும் வராததால் மேயர் மகலாட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறவில்லை என அறிவித்துவிட்டு ஆணையர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திமுக தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள் திமுக கவுன்சிலர்களை அழைத்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பது புதிராக உள்ளது.