மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று (ஞாயிறு) மாலை விநாடிக்கு நீர்வரத்து 1,52,903 கன அடியாக இருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை நீர்வரத்து 1,53,091 கன அடியாக உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 112.26 அடியாக இருந்த நிலையில் மாலையில் 116.36 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 81.67 டிஎம்சியில் இருந்து, இன்று 87.78 டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று விநாடிக்கு 12,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை முதல் படிப்படியாக உயர்த்தி 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கு, இன்னும் 3.50 அடியே உள்ளது. இன்னும் 5 டிஎம்சி தண்ணீரை அணைக்குள் தேக்கினால் முழு கொள்ளளவை எட்டிவிடும்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளது. அணை நிரம்பினால், உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில், அணை வளாகத்தில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.36 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இருவரும் நிலையில் மேட்டூர் அணை ஓரிரு நாட்களுக்குள் 120 அடியை எட்டிவிடும். எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகள் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.