புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வாக இன்று மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தி வருகிறது. இதில் இன்று மான்போர்ட் பள்ளி, பிரகதாம்பாள் பள்ளி, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வை அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.சேதுராமன், வெறும் கையில் இருந்து விபூதி வரவழைத்தல், கைகளை சிவப்பு நிறமாக மாற்றுதல், பந்துகளை காணாமல் ஆக்குதல், மூன்று கயிறுகளை ஒரே கயிறாக மாற்றுதல், போன்ற குழந்தைகள் வியக்கும் வகையில் மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் க.சதாசிவம், தொடு உணர்வு அறிதல், பயமில்லாமல் இருப்பது எப்படி? என்பது போன்ற எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தார். மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, முனைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர் ஜீவி மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஜெயராம் கு.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.