“பாஜக கூட்டணியிலிருந்து முதல்வர் ரங்கசாமி வெளியேற வேண்டும்” – திமுக வலியுறுத்தல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது சுயகவுரவத்தைக் காப்பாற்ற பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற புதுச்சேரி மக்கள் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பூ.மூர்த்தி வரவேற்றார். திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான சபாபதி மோகன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் சிறு நிதியைக்கூட பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசு புதுச்சேரிக்கு ஒதுக்கவில்லை. புதுச்சேரியின் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கின்ற மாநில அந்தஸ்து குறித்து 14 முறை தீர்மானம் இயற்றியும் அதற்கு பதிலில்லை.

ஜிப்மர் மருத்துவமனையில் இன்று பணம் பெற்று மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து பொதுமக்கள், நோயாளிகள் போராடி வருகின்றனர். இது தமிழ் மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவில்லை. போதிய நிதியை மத்திய அரசு கொடுக்காத காரணத்தால் புதுச்சேரி மாநிலம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக தோல்வியடைந்து ரூ. 650 கோடியில் முடங்கி உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு சிறப்புச் சலுகை பற்றிய அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 16-வது நிதிக் குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு காதில் வாங்கவில்லை.

ஜிஎஸ்டியில் சிறப்பு சலுகை 15 ஆண்டுகளுக்கு தருகிறோம் என்றார்கள். ஆனால், ரூ.2 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி கட்டும் புதுவைக்கு வெறும் ரூ. 500 கோடி தான் திருப்பித் தந்துள்ளார்கள். 5 ஆண்டு காலம் ஜிஎஸ்டி நஷ்டஈட்டை தராமல் இருக்கிறது மத்திய அரசு. இப்படி அனைத்து வகையிலும் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது.

இதனிடையே வரும் 2-ம் தேதி புதுச்சேரியில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஆனால் பாஜக-வைச் சேர்ந்த 7 எம்எல்ஏ-க்கள், ‘நாங்கள் இல்லாமல் எப்படி பேரவை நடக்கும்?’ என்று சவால் விடுத்துள்ளனர். ஆகவே, முதல்வர் ரங்கசாமி தனது சுயகவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.