எழுத்து உங்கள் வாழ்வின் முடிவை மாற்றும் வல்லமை படைத்தது – எம்.எம்.அப்துல்லா பேச்சு

எழுத்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் முடிவையே மாற்றும் வல்லமை படைத்தது என்றார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1991-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்திய இயக்கம். அறிவொளி இயக்கத்தில் மாணவப் பருவத்தில் நான் தன்னார்வத் தொண்டராக, கலைக்குழு செயல்பாட்டாளராக செயல்பட்ட காலம் எல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள். அப்பொழுது முதல் தற்பொழுது வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது புத்தகத் திருவிழாவை ஆரம்பத்தில் தனித்தும், கடந்த இரண்டு வருடங்களாக மாவட்ட நிர்வாகத்துடனும் இணைந்து நடத்தி வருவது பாராட்டுக்குறியது.

எழுத்து ஏதோ ஒரு சந்தர்பத்தில் உங்கள் முடிவையே மாற்றிவிடும். வணிக குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அதை எனது குடும்பத்தினர் விரும்பவில்லை. முடிவை எடுக்க முடியாமல் தவித்த எனக்கு கருப்பினத் தலைவர் மார்க்கிங் லூதர்கிங் எழுத்திய புத்தகம் எனக்கு தெளிவைக் காட்டியது. அதுதான் அரசியல் வாதியாகத் தொடர எனக்கு உந்துசக்தியாக இருந்தது.

ஒரு கதையை திரைப்படமாக பார்க்கும் அந்தப் பட இயக்குநர் பார்வியல்தான் காட்சிப்படுத்தப்படும். ஆனால், அதே கதையை எழுத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காட்சிகள் அவர்களின் கற்பனையில் விரியும். இதுதான் எழுத்தின் சிறப்பு. விசாலமான அறிவை புத்தகங்கள் வாயிலாக மட்டுமே பெற முடியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் வள்ளுவன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் எழுதியவைதான் இந்த மண்ணில் இன்றைக்கு அரசியலாக மாறி இருக்கிறது என்று எம்.எம்.அப்துல்லா எம்பி பேசினார்.