எழுத்துதான் நமது முன்னோர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வந்துள்ளது – இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு

எழுத்துதான் நமது முன்னோர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வந்துள்ளது என்று எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தி வரும் 7-ஆவது புத்தகத் திருவிழாவின் 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘எழுத்தென்ப…’ என்ற தலைப்பில் அவர் பேசியது ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய 6 மொழிகளில் சீனமும், தமிழும் மட்டுமே மனிதர்கள் பேசும் – உயிர்ப்புடன் இருக்கும் மொழிகளாகும்.

கீழடியில் வெளிப்பட்ட ஆய்வில் தான், தமிழின் வயது 3,500 ஆண்டுகள் எனத் தெரியவந்துள்ளது. அதற்கு அடிப்படை, அங்கிருந்து எடுக்கப்பட்ட பானை ஓடு, அதில் எழுதப்பட்ட எழுத்து. எழுத்துதான் மொழியை காத்து வந்துள்ளது, வரலாற்றை அவணப்படுத்தியுள்ளது, எழுத்து மயக்கமில்லாதது, தீர்மானிக்கப்பட்டது. 3,500 ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அப்போது எழுதி வைக்கப்பட்ட எழுத்துதான் காரணம்.

உலக அறிஞர் மார்க்கோபோலோ தனது பயண அனுபவங்களை விலங்கின் தோலில்தான் எழுதினார். யாரெல்லாம் அந்தப் புத்தகத்தை காசு கொடுத்து கேட்டார்களோ, அவர்களுக்கு விலங்கின் தோலில் ஒவ்வொரு முறையும் எழுதி எழுதிக் கொடுக்கப்பட்டது. உலகின் அதிக பிரதிகள் விற்பனையானது மார்க்கோபோலோவின் நூல்தான்.

மண்ணில், சுட்ட மண்ணில், ஓட்டில், கல்லில், காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் தான் நம் வரலாறு. 5-ஆம் நூற்றாண்டிலேயே சீனர்கள் காகிதத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். உலகுக்குச் சொல்லவில்லை. அரேபியர்கள் வணிகத்துக்காக சென்றப்போது காகிதத்தை தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை அறிந்து வந்து தயாரிக்கத் தொடங்கினர்.

உலகின் வேறெங்கும் இல்லாத வகையில் பனை ஓலையில் எழுதும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் தமிழர்கள். பனை ஓலையின் நடு நரம்பின் பக்கத்தில் எழுதினால் தான், அந்த எழுத்து பக்கவாட்டில் ஏற்படும் வெடிப்புகளால் சேதமடையாமல் இருக்கும். அந்த நடுப்பகுதிக்குப் பெயர் இலக்கு. அதிலிருந்துதான் இலக்கியம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

புத்தன் ஒரு எழுத்தைக் கூட எழுதவில்லை. அவரது முதன்மை சீடர் ஆனந்தன் உள்ளிட்டோர் எழுதியதுதான் புத்த தத்துவங்கள், அதேபோல நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து, சாக்ரட்டீஸ் போன்றவர்களும் எதையும் எழுதவில்லை. அவர்களின் கருத்துக்களை அவர்களின் சீடர்கள் எழுதி வைத்துள்ளனர். எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டதாலேயே இன்று அவரை வரலாறாகப் பேசப்படுகிறது. நம் முன்னோர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், வரலாறு எல்லாமே எழுத்தின் மூலமாகத்தான் நமக்கு அறியக்கிடைக்கிறது.

எல்லா மதத்தினரையும் சமமாகப் பாவிப்போம் என அசோகர் எழுதி வைத்த சொற்களுக்காகத்தான் அசோக சின்னத்தை தேசத்தின் சின்னமாக அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார். எனவே எழுத்து என்பது மொழியின் ஆயுள், வரலாறு, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், பாரம்பரியம். எழுத்து நம்மை மேன்மைப்படுத்தும், தூய்மைப்படுத்தும், எல்லாத் துன்பங்களையும் கடக்கச் சொல்லித் தரும்  அந்த எழுத்தைக் காக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தாரா மருத்துவமனை பி.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ம.வீரமுத்து வரவேற்றார். முடிவில் இணைச் செயலர் ஆர்.பிச்சைமுத்து நன்றி கூறினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.