புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று வழங்கினார்.
பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாணவ, மாணவிகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாவட்டம் தோறும் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான, விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,678 பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,12,207 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தைப்பேட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பயிலும் 335 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே மாணவ, மாணவிகளின் நலனிற்காக தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் கல்வி சார்ந்த திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, கல்வியில் சிறப்பாக விளங்கிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), செந்தில் (தொடக்கநிலை), முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், பள்ளி தலைமையாசிரியை ஆர்.தமிழரசி, வட்டாட்சியர் பரணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.