புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 31-ல் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிவிட்டு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விடைபெறுகிறார். அன்று மாலையே அவர் மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்கிறார். புதிய ஆளுநர் கைலாசநாதன் ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி வருகிறார். அவர் ஆகஸ்ட் 2-ல் புதுச்சேரி ஆளுநராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த, குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக 45 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் பேரவையில் ஆளுநராக யார் உரையாற்றுவார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, “தெலங்கானாவிலிருந்து இன்று இரவு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 31-ம் தேதி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து ராஜ்நிவாஸ் திரும்புகிறார். உடனடியாக அவர் மகாராஷ்டிரா புறப்படுகிறார். இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பிறகு வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடக்கிறது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா சென்று 31-ம் தேதி மாலையே ஆளுநராக பொறுப்பேற்கிறார். வரும் ஆகஸ்ட் 2-ல் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அன்று மாலை புதிய ஆளுநர் கைலாசநாதன் பதவியேற்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.” என்றனர்.