ரயில் நிலையங்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் குறித்த மாதிரியை கணினி மூலம் அவர் பார்வையிட்டார். பின்னர் கட்டுப்பாட்டு அறை, பயணிகளுக்கான குடிநீர் வசதி மற்றும் கண்காணிப்புக் கேமிரா அறைகளையும் அவர் பார்வையிட்டார்.
ரயில் நிலைய முதல் நடைமேடைப் பகுதியில் இருந்த கடைகளை பார்வையிட்ட அவர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கடைகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், அந்தந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுச்சேரி ரயில் நிலையம் தற்போது ரூ.93 கோடியில் சீரமைக்கப்படுகிறது. பிரதமரும், ரயில்வே துறை அமைச்சரும் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்தி மக்களுக்கான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்திவருகின்றனர்” என்றார். ரயில் நிலைய ஆய்வின்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.