பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிர்பயா திட்டத்தின்கீழ் அளிக்கும் நிதியை முழுமையாகப் பெற்று அதை பயன்படுத்துவதற்கு ஏதுவாக உயர்மட்டக்குழுவை அமைக்கக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் கடந்தமுறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக உள்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘நிர்பயா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கென தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக 13 ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தடுப்பு, சைபர் குற்றங்களுக்கான தடயவியல் ஆய்வக கருவிகள் கொள்முதல் போன்ற பணிகளுக்கும் நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.