புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்தில், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை, மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்.
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கிடும் வகையில், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கட்டடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கொத்தமங்கலம் கிராமத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் 257.65 சதுர மீட்டர் பரப்பளவில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டடத்தில், மருத்துவ அலுவலர் அறை, மருந்தக அறை, கழிப்பறையுடன் கூடிய பிரசவ அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வக அறை, ஊசி செலுத்தும் அறை, கட்டுப்போடும் அறை, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் சிறப்புடன் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவத்திற்காக நீண்ட தூரம் சென்றுவருவது தவிர்க்கப்பட்டு, தங்களது இல்லங்களுக்கு அருகாமையிலேயே மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்கள் அனைவரும், இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு நோயற்ற நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (அறந்தாங்கி) மரு.நமச்சிவாயம், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மேனாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி, வட்டார மருத்துவ அலுவலர் ராம்சந்தர், கொத்தமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தி வளர்மதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.