“காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112-வது நிகழ்ச்சி இன்று வெளியானது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், “பாரிஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அரங்கில் மூவர்ண கொடியை பெருமையுடன் அசைக்க நமது விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு அளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை சாதிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஆதரிக்க வேண்டும், நாட்டுக்காக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக, அசாமின் சாரெய்டியோ மைடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இது இந்தியாவின் 43வது தளம். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதல் தளமாகும். சாரிடியோ என்றால் மலைகளின் மீது ஒளிரும் நகரம் என்று பொருள். இது அஹோம் வம்சத்தின் முதல் தலைநகரம். அஹோம் வம்சத்தின் மக்கள் பாரம்பரியமாக தங்கள் மூதாதையர்களின் மரண எச்சங்கள் மற்றும் அவர்களின் மதிப்புமிக்க பொருட்களை மைடமில் வைத்திருந்தனர்.
மைடம் என்பது ஒரு மேடு போன்ற அமைப்பு, மேலே மண்ணால் மூடப்பட்டிருக்கும், கீழே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த மைடம் அஹோம் பேரரசின் மறைந்த மன்னர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான மரியாதைக்குரிய சின்னமாகும். ஒருவருடைய முன்னோர்களுக்கு மரியாதை காட்டும் இந்த முறை மிகவும் தனித்துவமானது. இத்தலத்தில் சமுதாய வழிபாடும் நடைபெற்றது.
அஹோம் பேரரசு பற்றிய மற்ற தகவல்கள் உங்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். 13-ம் நூற்றாண்டில் தொடங்கி, 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்தப் பேரரசு நீடித்தது. ஒரு சாம்ராஜ்யம் இவ்வளவு காலம் நிலைத்து நிற்பது ஒரு பெரிய சாதனையாகும். அஹோம் பேரரசின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் மிகவும் வலுவாக இருந்ததால், அது இந்த வம்சத்தை நீண்ட காலமாக உயிருடன் வைத்திருந்தது.
இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி, தைரியம் மற்றும் துணிச்சலின் சின்னமான அஹோம் போர்வீரன் லசித் போர்புகானின் மிக உயரமான சிலையை திறக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் போது, அஹோம் சமூகத்தின் ஆன்மீக பாரம்பரியத்தை பின்பற்றும் போது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. லசித் மைடமில் அஹோம் சமூகத்தின் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் பாக்கியம் கிடைத்திருப்பது உண்மையிலேயே எனக்கு ஒரு பெரிய உணர்வு. ஒரு நாடு தனது கலாச்சாரத்தில் பெருமை கொள்வதன் மூலம் மட்டுமே முன்னேற முடியும். இந்தியாவில் இதுபோன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பெண்கள் சிறு சிறு கடைகள் எனக் கூலித் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் UNNATI சுயஉதவி குழுவில் சேர்ந்து, பிளாக் பிரிண்டிங் மற்றும் டையிங் பயிற்சி பெற்றனர். இந்த பெண்கள் இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் கட்டில் உறைகள், புடவைகள், துப்பட்டாக்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.
ரோஹ்தக்கின் இந்தப் பெண்களைப் போலவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள் கைத்தறியை பிரபலமாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். அது ஒடிசாவின் சம்பல்புரி புடவையாக இருந்தாலும், மத்திய பிரதேசத்தின் மகேஸ்வரி புடவையாக இருந்தாலும், மகாராஷ்டிராவின் பைதானியாக இருந்தாலும் அல்லது விதர்பாவின் ஹேண்ட் பிளாக் பிரிண்ட்களாக இருந்தாலும், ஹிமாச்சலின் பூட்டிகோ சால்வைகள் மற்றும் கம்பளி ஆடைகள் அல்லது ஜம்மு காஷ்மீரின் கனி சால்வைகள் என கைத்தறி கைவினைஞர்களின் பணி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது.
இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடவுள்ளோம். இப்போது பல தனியார் நிறுவனங்களும் AI மூலம் கைத்தறி தயாரிப்புகள் மற்றும் ஃபேஷனை ஊக்குவிக்கின்றன. Kosha AI, Handloom India, D-Junk, Novatax, Brahmaputra Fables, போன்ற பல ஸ்டார்ட்-அப்களும் கைத்தறி பொருட்களை பிரபலமாக்குவதில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, காதி கிராமத் தொழில்துறையின் வருவாய் முதன்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை யோசித்துப் பாருங்கள். காதி விற்பனை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா? 400%. அதிகரித்து வரும் காதி, கைத்தறி விற்பனை, புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. பெரும்பாலும், பெண்கள் இந்தத் தொழிலில் இணைந்திருப்பதால், அவர்கள் அதிகம் பயனடைகிறார்கள். நான் மக்களை கேட்டுக்கொள்வது, நீங்கள் இதுவரை காதி ஆடைகளை வாங்கவில்லை என்றால், இந்த ஆண்டிலிருந்து தொடங்குங்கள். ஆகஸ்ட் மாதம், இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், இது புரட்சியின் மாதம். காதியை வாங்க இதைவிட சிறந்த வாய்ப்பு வேறு என்ன இருக்க முடியும்.
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தை போதைப்பொருளின் பிடியில் சிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். இப்போது அத்தகையவர்களுக்கு உதவ, அரசாங்கம் ஒரு சிறப்பு மையத்தைத் திறந்துள்ளது, அதன் பெயர் ‘மானஸ்’. போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய படியாகும். சில நாட்களுக்கு முன்பு, ‘மானஸ்’ என்ற ஹெல்ப்லைன் மற்றும் போர்டல் தொடங்கப்பட்டது. போதை மறுவாழ்வு தொடர்பான தேவையான ஆலோசனைகள் அல்லது தகவல்களைப் பெற ‘1933’ என்ற இலவச எண்ணை அழைக்கலாம்.
புலிகள் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புலிகள் நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. நாம் அனைவரும் புலிகள் தொடர்பான சம்பவங்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில், புலியுடன் எப்படி இணக்கமாக வாழ வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். நம் நாட்டில் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் இல்லாத கிராமங்கள் ஏராளம்.
ஆனால், மனித – புலி மோதல்கள் ஏற்படும்போது, அங்கும் புலிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று “குல்ஹாடி பேண்ட் பஞ்சாயத்து” ஆகும். ராஜஸ்தானின் ரந்தம்போரிலிருந்து தொடங்கிய “குல்ஹாடி பேண்ட் பஞ்சாயத்து” பிரச்சாரம் மிகவும் சுவாரஸ்யமானது. கோடரியுடன் காட்டுக்கு செல்லமாட்டோம், மரங்களை வெட்ட மாட்டோம் என உள்ளூர் சமூகங்களே உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்த ஒரு முடிவால் இங்குள்ள காடுகள் மீண்டும் பசுமையாக மாறி, புலிகளுக்கு சிறந்த சூழல் உருவாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகம் புலிகளின் முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாகும். இங்குள்ள உள்ளூர் சமூகங்கள், குறிப்பாக கோண்ட் மற்றும் மானா பழங்குடியினர், சுற்றுச்சூழல் சுற்றுலாவை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இங்கு புலிகளின் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் தாங்கள் காடுகளை சார்ந்திருப்பதை குறைத்துள்ளனர். ஆந்திராவில் உள்ள நல்லமலை மலையில் வாழும் ‘செஞ்சு’ பழங்குடியினரின் முயற்சியும் அதுபோல் தான். அவர்கள், புலி கண்காணிப்பாளர்கள் என்ற முறையில், வனப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்த ஒவ்வொரு தகவலையும் சேகரித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களையும் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் நடைபெற்று வரும் ‘பாக் மித்ர் கரிக்ரம்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் கீழ், உள்ளூர் மக்கள் ‘புலிகளுக்கு நண்பர்களாக’ இருக்க பயிற்சி எடுக்கிறார்கள். இந்த ‘புலி நண்பர்கள்’ குழு புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. இதுபோன்ற பல முயற்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.
புலிகள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய முயற்சிகளால்தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் நம் நாட்டில்தான் உள்ளது. கற்பனை செய்து பாருங்கள். 70 சதவீதம் புலிகள். அதனால்தான் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல புலிகள் சரணாலயங்கள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன், நம் நாட்டில் வனப்பகுதியும் வேகமாக அதிகரித்து வருகிறது. சமுதாய முயற்சியால் இதில் பெரும் வெற்றி கிடைத்து வருகிறது.
ஆகஸ்ட் 15-ம் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்போது ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு மற்றொரு பிரச்சாரம் சேர்க்கப்பட்டுள்ளது, அது ‘ஹர் கர் திரங்கா அபியான்’. சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை கொண்டாடுவது தான் இந்த பிரச்சாரம். கடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் ‘ஹர் கர் திரங்கா அபியான்’ மீதான அனைவரின் ஆர்வமும் அதிகமாகவே உள்ளது. ஏழைகள்… பணக்காரர்கள்… சிறிய குடும்பங்கள், பெரிய குடும்பங்கள் என அனைவரும் மூவர்ணக் கொடியை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
‘ஹர் கர் திரங்கா அபியான்’ மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது. இப்போது, அது தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளும் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதி நெருங்கி வருவதால், மக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்கள், கார்கள் போன்றவற்றில் மூவர்ணக் கொடியை காட்சிப்படுத்த உள்ளனர். சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு ‘மூவர்ணக் கொடியை’ விநியோகிக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி, மூவர்ணக் கொடியின் மீதான இந்த உற்சாகம் நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கிறது. கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் மக்கள் மூவர்ணக் கொடியுடன் எடுக்கப்பட்ட உங்கள் செல்ஃபியை ‘hargartiranga.com’-ல் பதிவேற்ற வேண்டும்.” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.