புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுச்சியுடன் தொடங்கியது. அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றினர்.
7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை காலை எழுச்சியுடன் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குளைக் கொண்ட புத்தக் கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்து, கண்காட்சியை பார்வையிட்டு உரை நிகழ்த்தினர்.
மநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது:- இணையதளத்தில் தேடினால் எல்லாமும் கிடைக்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், புத்தகங்களை வாசித்தால் மட்டுமே நினைவாற்றலை அதிகரிக்கும். ஒவ்வொருவரும் அதிக புத்தகங்களை வாங்கி வீடுகளில் நூலகத்தை உருவாக்க வேண்டும். அப்போது சிறைச்சாலை தேவையிருக்காது. இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது என்றார்.
மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:- இளைஞர் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுவதற்காக இதுபோன்ற புத்தகத் திருவிழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியினால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது. மருத்துவம், வேளாண்மை, கலை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைத் தொடங்கியுள்ளதால் 51 விழுக்காடு உயர்கல்வி பெற்ற மாநிலமாக உயர்ந்து நிற்கிறது.
பாடங்களோடு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான ஏராளமான புத்தகங்கள் இப்புத்தகத் திருவிழா அரங்குகளில் கிடைக்கின்றன. அவற்றை இளைய சமூதாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளால்; சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தில் 81 விழுக்காடு பெற்று, நாட்டில் 2-வது மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதன் தேசிய அளவிலான சராசரி 67 சதவீதமாகும்.
பசுமையான சூழல் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதைப்போல படிக்கும் புத்தகங்களும் அளிக்கும். ஆகவேல ஒவ்வொரு மனிதனும் புத்தகங்களையும், மரங்களையும் நேசிக்க வேண்டும்.
புத்தகங்கள் வாசிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நிறைய வாசிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டுடாம். ஒருவரிதான் வாசிக்க முடியுமென்றால் ஆத்திசூடியை வாசிக்கலாம். 2 வரிதான் வாசிக்க முடியுமென்றால் திருக்குறளை வாதிக்கலாம். 3 வரியை வாசிக்க முடியுமென்றால் ஹைக்கூவையும், 4 வரிதான் முடியுமென்றால் நாலடியாரையும் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஏற்ப வரிகள் உண்டு. எனவே, வாசிக்கத் தவறாதீர்கள். போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம், அதை எதிர்கொள்ளும் சிறந்த ஆயுதம் புத்தகங்களே!. புகழோடும், பெருமையோடும், சமூகத்தில் உயர்ந்து விளங்க வேண்டுமென்றால் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்காமல் அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். செல்போனை அதிகம் பயன்படுத்தினால் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பதவி, பொருள், புகழை யார் வேண்டுமானும் பறித்துச் சென்றுவிடலாம். ஒருபோதும் அறிவை யாராலும் பறிக்க முடியாது. அந்த அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை வாசிப்போம். 10 நாட்களும் நடைபெறும் புத்தக விழாக்களை கொண்டாடுவோம். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சின்னதுரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ஜெயலெட்சுமி, அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி வரவேற்க, ஒருங்கிணைப்பாளர் த.விமலா நன்றி கூறினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.பிரேமலதா நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார். இளைய மன்னர் ஆர்.விஜயகுமார் தொடக்கவுரையாற்றினார். திரைப்பட இயக்குனர், நடிகர் போஸ் வெங்கட் சிறப்புரையாற்றினார். பள்ளி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் வரவேற்க, அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ஈ.பவுனம்மாள் நன்றி கூறினார்.