“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்” – அகிலேஷ் யாதவ்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து அக்னி வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குறுகிற கால அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். அதேபோன்று பழைய ஆள்சேர்ப்பு முறை திரும்பக்கொண்டு வரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காவல் துறை மற்றும் மாகாண ஆயுதக் காவலர் ஆள்சேர்ப்புக்காக (பிஏசி) பணியில் இருந்து திரும்பிய அக்னி வீரர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு கூடுதல் அங்கீகாரம் வழங்கும் என்று ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக ஆளும் குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆகிய 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.