மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது குடியரசுத் தலைவர் பதவி காலத்துக்கு பின்னர், நாடு முழுவதும் பயணம் செய்து பள்ளி – கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து வந்தார். அப்படி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கலாம் உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அப்துல் கலாமின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதில் பாஜகவின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக், செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், வட்டாச்சியர் அப்துல் ஜபார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தர்மர் எம்.பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.