பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா இருந்தபோது அவரை அவதூறாகப் பேசியதாக பாஜகவின் விஜய் மிஸ்ரா என்பவர் 2018, ஆகஸ்ட் 4-ம் தேதி ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்தை பதிவு செய்ய அவர் ஜூலை 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிபதி சுபம் வெர்மா நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். ராகுல் காந்தியின் வருகையை அடுத்து நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளான கட்சித் தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். பலர் அவர் மீது பூக்களைத் தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
பெரும் நெரிசலுக்கு மத்தியில் நீதிமன்றத்துக்குள் சென்ற ராகுல் காந்தி, நீதிபதி முன் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்.
ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகார்தாரர் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே, “தன் மீதான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்தார். அரசியல் காரணங்களுக்காகவும், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் இந்த வழக்கு புனையப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவரது பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனி, நாங்கள் அவர் அவதூறாகப் பேசியதற்கான ஆதாரங்கள் குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 12ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்” என கூறினார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் நீதிமன்ற வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பிரமோத் திவாரி, “காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்வது பாஜகவின் கேவலமான அரசியல். பாஜகவின் இந்த கேவலமான அரசியலை நான் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.