புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக கல்லீரல் அலர்ஜி நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் செ.கவிதா, தமிழத்துறை பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இயன்முறை மருத்துவர் க.கோவிந்தசாமி தொடக்கவுரையாற்றி பேசியது- ஹெப்படைட்டிஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் நோய்களும், குடிப்பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் ஒரு புறம் இருக்க, துரித உணவு பழக்க வழக்கத்தால் என்ஏஎஎஃப்எல்டி எனும் கொழுப்பு கல்லீரல் நோய்களும் வாழ்நாளை குறைக்கின்றன. மேலும் ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் தாக்கத்தால் கல்;லீரல் நோய் முறையான சிகிச்சை இல்லாவிட்டால் கல்லீரல் அழுகல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கதிர்வீச்சு மற்றும் புற்றுநோய் நிபுணர் அரசு மருத்துவர் உ.உஷாராணி கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியது- நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். இது சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கை வகிக்கிறது. மேலும் புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிக்கரமாக இருக்கிறது. சிலருக்கு கல்லீரல் பாதிப்பினாரல் சரியாகப் பசி ஏற்படாது. சில சமயம் அதிகமாக பசியெடுக்கும், உடல் முழவதும் வெளுத்தும், மலமும் வெளுத்தும் போய் உடலில் ஒரு ஓய்ச்சலும். தலைசுற்றல், மயக்கம் ஆகியவைகளும் உண்டாகும். அல்லது மலம். சிறுநீர், கண், நாக்கு, உடல் முழுவதுமே மஞ்சள் நிறமாகிவிடும். இவ்வகை உபாதைகள் கொஞ்ச நாள் நீடித்து, நாளாக, நாளாக பலவீனமும் அதிகரித்து கடைசியில் மனிதன் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
ஒரு மனிதனின் கல்லீரல், சராசரி 1.3முதல் 1.6கி.கிராம் வரை இருக்கும். இது அதிக எடை கொண்ட உள்ளுறுப்பு என்றே சொல்லலாம். இந்த உறுப்பு சரியாகத் தன் வேலைகளைச் செய்து வந்தால், உடலில் நமக்கும் எந்த உபாதையும் ஏற்படாது. ஆனால் சற்றே தவறிவிட்டால் போதும். தொடர்கதையாக உறுப்புகளில் பாதகங்கள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கிவிடும். மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு அறுவை சிகிச்சை செய்வதில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் ஒன்று கூட என சொல்லலாம். ஏனென்றால் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுவாக 6முதல் 10மணி நேரமாகலாம். பொதுவாக கல்லீரல் நோய்களின் அறிகுறிகளாக தோலில் மஞ்சள் நிறம், மஞ்சள் காமாலை, பசியின்மை, வழக்கத்தை விட அதிகமான சோர்வு, உடல் எடை கூடுதல், வாய்- நாக்கில் வறட்சித் தன்மை, அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, வயிற்றுப் போக்கு, மூட்டு வலி, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, ரத்தம் உறைவதில் பிரச்னை, காலில் நீர் தேங்குதல். நிறம் மாறி மலம் கழித்தல் போன்றவைகளாகும்.
கல்லீரல் அலர்ஜி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நோபல் பரிசு பெற்றவரான பரூச் சாமுவேல் புளும்பெர்கின் பிறந்தநாளான ஜீலை 28-ஐ உலக கல்லீரல் அலர்ஜி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உங்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள், தோழிகள் ஆகியோர்களிடம் இது போன்ற தகவல்களை கொண்டுச் சேர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் தலைவர் முனைவர் நா.பூர்ணிமா வரவேற்றார். உறுப்பினர் மு.சிவரஞ்சனி தொகுத்தளித்தார், முடிவில் பொருளாளர் மு.கீதா நன்றி கூறினார்.