தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக நேற்று மாலை மாலை 5 மணிக்கு திருச்சிலுவை சிற்றலாயத்தில் இருந்து மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி நடந்தது. இதனை தொடர்ந்து தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைப்பெற்றது. தொடர்ந்து 8.30 மணியளவில் தூயபனிமய மாதா பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருவுருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றப்பட்டவுடன் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பல்கள் மூலம் ஒலி எழுப்பட்டது.
இன்று பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.
தூயபனிமய மாதா பேராலயத்தின் 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ஆம் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். ஆகஸ்டு 5-ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது. தூயபனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் வரலாறு :
முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் தூய பனிமய மாதா சொரூபம் மரப்பேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் 1555-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது. கி.பி. 1582-ம் ஆண்டு ஏசு சபை குருக்கள் ஒரு சிறிய ஆலயம் கட்டி அந்த ஆலயத்தில் அன்னையின் இந்த சொரூபத்தை வைத்தனர். பின்னாளில், தூத்துக்குடியில் பங்குத்தந்தையாக இருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த விஜிலியுஸ் மான்சி இந்த சொரூபத்தை தென்னங்கீற்றுகளாலும், மண் சுவர்களாலும் ஆன குருக்கள் இல்லத்தில் வைத்திருந்தார்.
இந்த காலக் கட்டத்தில் தான் 1707ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவில் சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமி தங்கியிருந்த அறையில் பயங்கர இடி விழுந்தது. அப்போது இப்பேராலயத்தில் இருந்த சங்.விஜிலியூஸ் மான்சி சுவாமியையும் அவரோடு இருந்த சக ஊழியர்களையும் பனிமய மாதா காப்பாற்றினார். மாதா சொரூபமானது இடிதாக்கிய பின்னர், பனிமய மாதா இடி தாங்கிய மாதா என்றே அழைக்கப்பட்டார். இதை உலகுக்கு உணர்த்த விரும்பிய அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி, மின்னல் தாக்கிய கூரையின் நேர் எதிரிலேயே முற்றிலும் கற்களால் ஆன ஆலயத்தை பல இன்னல்களுக்கு இடையே கட்ட ஆரம்பித்தார். 1712 ஏப்ரல் 4-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
அன்னை மரியாளுக்கு உலகிலேயே முதன் முறையாக ரோமில் உள்ள எஸ்கலின் என்ற குன்றின் மீது கி.பி. 352ல் ஆலயம் அமைக்கப்பட்டது. அப்போது போப்பாக இருந்த அருட்தந்தை லிபேரியுஸ் மற்றும் அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் ஆகியோருக்கு அன்னை மரியாள் காட்சி தந்து பனி பெய்யவே முடியாத கோடைக் காலத்தில் பனி பெய்யச் செய்து தனக்கு ஆலயம் அமைக்க வேண்டிய இடத்தை அருளினார். உலகின் பல பகுதிகளில் பனிமய மாதா சொரூபத்தை கொண்டு பல ஆலயங்கள் கட்டப்பட்டன. அதேபோன்ற ஒரு சொரூபம் தான் தூத்துக்குடிக்கும் வந்து சேர்ந்தது.
மேலும், எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட அன்னையின் ஆலயமும், தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலயமும் ஆகஸ்ட் 5ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. அதனால்தான் இந்த ஆலயம் தூய பனிமய மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத்தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.