கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
முன்னதாக பிரதமர் மோடி நேற்று எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் இந்தியாவின் துணிச்சல் மிக்கவர்களின் வீரக் கதையை நம் கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சிறப்புமிக்க நாளில் இதயபூர்வமாக அவர்களுக்குத் தலை வணங்குகிறேன். வாழ்க இந்தியா” என்று பதிவிட்டிருந்தார். அதேபோல், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் எக்ஸ் பக்கத்தில், “நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 25-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கார்கில் வெற்றி விழாவை லடாக் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.