புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ரங்கசாமி

நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதற்காக இன்று இரவு அவர் டெல்லிக்கு செல்வதை முதல்வர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை சனிக்கிழமை நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அமைப்பு கடிதம் அனுப்பியது. கடந்த வருடங்களில் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக நிதி ஆயோக் கூட்டங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.

இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தில், தான் பங்கேற்பது பற்றி உறுதி செய்யாமல் இருந்தார் முதல்வர் ரங்கசாமி. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கும் பதில் தரவில்லை. ஏனெனில் டெல்லியில் ஏற்கெனவே நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்காமல் இருந்தார். இச்சூழலில் மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியதாகக் கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோல், பட்ஜெட்டில் புதுச்சேரியும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வரும் புறக்கணிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இச்சூழலில் இம்முறை முதல்வர் ரங்கசாமி பங்கேற்பாரா? என்று முதல்வர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியே பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசுவதற்கான உரை அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல்வர் ரங்கசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.

அங்கு புதுவை விடுதியில் தங்கும் அவர், நாளை சனிக்கிழமை காலையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் நாளை இரவே அவர் புதுவைக்கு திரும்புகிறார்.” என்ற தகவலை உறுதி செய்துள்ளனர்.