கோடநாடு வழக்கு சம்பந்தமாக வெளிநாட்டிலிருந்து வந்த தொலைபேசி எண்களை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளதால் வழக்கு விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
கோடநாடு கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோருக்கு ஜூலை 30-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், சிபிசிஐடி ஏடிஎஸ்பி-யான முருகவேல் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகினர்.
அப்போது, இந்த வழக்கு சம்பந்தமாக, வெளிநாட்டில் இருந்து வந்த செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை கண்டறிய இன்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளதால் கூடுதல் விசாரணை மேற்கொள்ள அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி அப்துல் காதர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிபதி அப்துல் காதர், விசாரணையின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டு செல்போன் அழைப்புகள் குறித்து இன்டர்போல் போலீஸார் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளதால், கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்” என வழக்கறிஞர் ஷாஜகான் கூறினார்.