புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு மாணவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை வளர்க்கும் பொருட்டு உணவுத் திருவிழா 2024 நிகழ்ச்சியை நடத்தினர். விழாவின் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்டம் சிறார் நீதிபதி என்.விஸ்வநாத் கலந்துக்கொண்டார்.

மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர். ஜெ.ஜோனத்தன் விழாவிற்கு வரவேற்புரை வழங்கினார். மௌண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் உணவுத் திருவிழா ஆண்டு அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய சிறப்பான முயற்சியைப்பற்றி வெகுவாகப் பாராட்டினார். மேலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இல்லாதோர்க்கு உதவி புரிந்து வாழக்கூடிய பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இன்றைய இளைஞர்கள் ஒழுக்கத்தோடு கூடிய வாழ்க்கை முறையை வாழ்தல் அவசியம் எனவும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுவையான பிரியாணி, பழச்சாறு, தானிய உணவுகள் என தங்கள் உணவினை சமைத்து விற்பனை செய்தனர். உணவு திருவிழாவில் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளிக்கல்வி முதல்வர் எஸ்.குமரேஷ் நன்றியுரை வழங்கினார். இத்தகைய உணவுத் திருவிழா நிகழ்ச்சியினை பள்ளியின் நிர்வாக முதல்வர் எஸ்.கிருபா ஜெபராஜ் ஏற்பாடு செய்திருந்தார்