நிர்மலா சீதாராமனை மாதாஜி என்று மல்லிகார்ஜுன் கார்கே அழைத்ததில் கேலி இல்லை என்றும், அவ்வாறு அழைத்ததற்காக அவர் மரியாதைக்குரியவராக உணர வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரமோத் திவாரி, “மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை “மாதாஜி” என்று கார்கே அழைத்ததில் கேலி இல்லை. “மாதாஜி” என்று அழைத்ததற்காக நிர்மலா சீதாராமன் மரியாதைக்குரியவராக உணர வேண்டும். மல்லிகார்ஜுன் கார்கே கர்நாடகாவிலிருந்து வந்தவர். ஒவ்வொரு பெண்ணையும் அழைக்க ‘அம்மா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “மாதாஜி” என்பது “அம்மா” என்பதன் மொழிபெயர்ப்பாகும். இதனை நிர்மலா சீதாராமன் உணர வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார். பட்ஜெட்டில் எதுவும் கிடைக்காத அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் கார்கே குறிப்பிட்டார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (புதன்கிழமை) பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, பட்ஜெட்டில் எந்த மாநிலத்துக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு தட்டுக்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தட்டுக்களும் காலியாக விடப்பட்டன. இதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடுவோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை போராட்டம் நடக்கும் என தெரிவித்தார்.
அப்போது, உங்களின் கருத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசுவார் என மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். அதற்கு கார்கே, பேசுவதில் மாதாஜி நிபுணர். அதை நான் அறிவேன் என கூறினார். இதன்மூலம், நிர்மலா சீதாராமனை கார்கே கேலி செய்வதாக பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.