தமிழக மீனவர்கள் 13 பேருக்கு காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன், எஸ்.விஜயபிரியன் (21), பி.காசிராஜா (68), வி.சேகர் (60) மற்றும் சிறுவன் என 5 பேரும், இ.மணிகண்டனுக்குச் சொந்தமான விசைப் படகில். அவருடன். வி.சுபாஷ் (26), ரகமத்துல்லா (38), எம்.திருமுருகன் (27) என 4 பேரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் நைனா முகமதுவுக்குச் சொந்தமான விசைப் படகில் என்.சந்திரசேகர் (42) எம்.கார்த்திக் (23), எம்.மணிகண்டன் (25), எம்.ஜெயக்குமார் (53) ஆகிய 4 பேரும் இருந்தனர்.

மொத்தம் 3 விசைப் படகுகளில் 13 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் ஜுலை 11 அன்று கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 13 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி ஷாலின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் காவலை ஜுலை 29-ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 13 மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.