“பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” – ஆர்ப்பாட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேச்சு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று சென்னையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுதல், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்கப்பட வேண்டும், காவிரி நீரை பெற்று தருதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்விசிறி, மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து எல்.கே.சுதீஷ் பேசியது: “திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. எஞ்சிய 2 ஆண்டுகளிலும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் வராமல் தவித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவால் தண்ணீரைக் கேட்டுப் பெற முடியவில்லை. தேர்தலின்போது மட்டும் பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். மத்திய பட்ஜெட்டில் பிஹாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி அள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நமக்கு நிதி கொடுக்கவில்லை. அதற்கு காரணமும் தமிழக அரசுதான். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நமக்கு தேவையான நிதியை கேட்டுப்பெற முயற்சி எடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே முன்பு தமிழகம்தான் சிறந்த மாநிலமாக இருந்தது. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை என சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள்தான். அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அதேபோல் தமிழக மக்களும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மதிக்காமல் தக்க பாடம் புகட்டுவார்கள். அப்போது தேமுதிக – அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்,” என்று எல்.கே.சுதீஷ் பேசினார்.