நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. எஸ்சி பிரிவினருக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 2020-ல், 50,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 2021ல், 50,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 2022ல் 57,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், எஸ்டி வகுப்பினருக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 2020ல் 8,272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 2021ல் 8,802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 2022ல், 10,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோடி அரசின் ‘தலித் விரோத’ மனநிலைக்கு இந்த புள்ளிவிவரங்கள் சான்று. மோடி அரசாங்கத்தின் கீழ், பட்டியலின மற்றும் பழங்குடி சமூகம் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதைக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.