ஜூலை 31-ல் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : ஆகஸ்ட் 2-ல் பட்ஜெட் தாக்கல் – பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜூலை 31-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது.

அதில், ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதுவை, யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுவை அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகங்கள் அண்மையில் அனுமதி வழங்கின.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதன்படி ஜூலை 31-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இத்தகவலை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று தெரிவித்தார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் பேரவைத் தலைவர் கூறினார்.