புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 7-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை. 27ம் தேதி தொடங்கி ஆக. 5ஆம் தேதி வரை மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ளது.
ஜூலை. 27ம் தேதி காலை தொடங்கும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
மாலை 7 மணிக்கு திரைப்பட இயக்குநர் போஸ் வெங்கட் ‘இளைஞர்களும் சினிமாவும்’ என்ற தலைப்பில் பேசுகிறார். ஜூலை 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, ‘எழுத்தென்ப…’ என்ற தலைப்பில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.
ஜூலை 29-ஆம் தேதி மாலை சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகிறார். 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட எழுத்தாளர்களைப் பாராட்டி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகிறார். தொடர்ந்து, ‘தமிழ் ஹைக்கூவின் தடங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் மு.முருகேஷ் பேசுகிறார்.
31-ஆம் தேதி புதன்கிழமை மாலை, ‘இசையாய் உலவும் நேற்றைய காற்று’ என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம், ‘கவியரங்க அனுபவங்கள்’ என்ற தலைப்பில் கவிதைப்பித்தன் ஆகியோர் பேசுகின்றனர். ஆக.1-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை, ‘சமத்துவம் என்னும் கனவு’ என்ற தலைப்பில் எழுத்தாள் அ.வெண்ணிலா பேசுகிறார். 2-ஆம் தேதி மாலை, ‘சிந்துவெளி ஆய்வின் நூற்றாண்டு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ‘புதுக்கோட்டை என்னும் புகழ்க்கோட்டை’ என்ற தலைப்பில் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.
3ஆம் தேதி சனிக்கிழமை மாலை, ‘போர் முனை முதல் தெருமுனை வரை’ என்ற தலைப்பில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு விஜயகுமார், ‘புத்தகங்கள் கட்டமைக்கும் பண்பாடு’ என்ற தலைப்பில் எஸ். சுப்பையா ஆகியோர் பேசுகின்றனர். 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. 5-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா பேசுகிறார். தொடர்ந்து, ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் புத்தகங்கள்’ என்ற தலைப்பில் பாடலாசிரியர் சிநேகன் பேசுகிறார்.
புத்தகத் திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று அளித்த பேட்டி: பிரபல புத்தக நிறுவனங்களின் சார்பில் 100 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்காக சிறார் நூல்களும், தின்பண்டங்களுக்கான தனி அரங்கும், விளையாட்டு அரங்கும் இம்முறை அமைக்கப்படுகிறது. அதிக நூல்களை வாங்கும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு சிறப்பு விருதுகள் தினமும் வழங்கப்படும். கடந்த ஆண்டு ரூ.3 கோடி விற்பனையானது. அதற்கு மேல் நிகழாண்டில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், மாணவர்களுக்கான பயிலரங்குகள் பகல் நேரங்களில் நடக்கின்றன. கோளரங்கம் அமைக்கப்படுகிறது. தொலைநோக்கி வழியாக வானியல் அறியும் நிகழ்வும் தினமும் நடைபெறும் என்றனர். இன்று மாலை புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பார்வையிட்டு அதிகாரிகளிடமும், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களிடமும் ஆலோசனை வழங்கினார்.