ட்ரம்ப் மீதான தாக்குதல் எதிரொலியாக விவிஐபிக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, விவிஐபிக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, ட்ரம்பின் கொலை முயற்சியை மேற்கோள் காட்டி, மத்திய அரசு மாநிலங்களை எச்சரித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியை அடுத்து, அதிக ஆபத்துள்ள முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பேரணிகள், ரோடு ஷோக்கள் போன்ற பொது நிகழ்வுகளின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பாதுகாப்பின் அவசியத்தையும் இந்த உத்தரவு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

அதில், மூன்று முக்கியமான விசியங்களை மேம்படுத்த அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப கண்காணிப்புகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தற்காப்பு பயிற்சிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே முக்கியப் பிரமுகர்களின் அருகில் இருப்பதை உறுதி செய்தல். பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடக்கும் இடங்களை கண்டிப்பாக தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அருகிலேயே மருத்துவமனைகள் இருப்பதை உறுதி செய்தல், சுற்றுப்புறத்தை 360 டிகிரி பார்வையில் கண்காணிக்க வேண்டும். ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 8, 2022 அன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு பேரணியின் போது, ​​பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் மாதம் சுடப்பட்டார். அர்ஜென்டினாவின் துணைத் குடியரசுத் தலைவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ், செப்டம்பர் 1, 2022 அன்று கொலை முயற்சியில் இருந்து தப்பினார். இத்தனை சம்பவங்களையும் மத்திய அரசு மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.