சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் பாண்டி (26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி குமாரி (22) என்பவரைக் காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நந்தினி குமாரியின் அண்ணன்கள் தனபால முருகன், பாலமுருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பையும் மீறி கார்த்திக் பாண்டியும் நந்தினி குமாரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். நந்தினி குமாரி சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 24) இரவு 9 மணியளவில் நந்தினி குமாரியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த தனபாலமுருகன் (27), பாலமுருகன் (26), அவரது உறவினர் சிவா (23) ஆகியோர் கார்த்திக் பாண்டியை வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எஸ்பி பெரோஸ் அப்துல்லா, டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருத்தங்கல் போலீஸார் தனபாலமுருகன், பாலமுருகன், சிவா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தங்கையை காதல் திருமணம் செய்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை பெண்ணின் சகோதரர்களே கொலை செய்ததால் ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.