மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே, அவர் மீது சிபிஐ தொடந்த ஊழல் வழக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலையும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முன்னதாக, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. என்றாலும், அந்த வழக்கில் அவர் ஜாமீன் பத்திரம் வழங்காததால் திஹார் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.