நாடாளுமன்ற இடையூறுகளை ஆயுதமாக்குவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் : ஜக்தீப் தன்கர்

நாடாளுமன்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவது ஒரு ஆயுதமாக கருதப்படுமானால் அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சத்தைக் காட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், “பட்ஜெட் மீதான விவாதம் இன்று பட்டியலிடப்பட்டது. விதிகள் பின்பற்றப்படும் என்று எதிர்பார்த்து எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் ஒப்புதல் அளித்தேன். ஆனால், இது ஒரு தந்திரமாகவும், உத்தியாகவும் பயன்படுத்தப்பட்டதை நான் காண்கிறேன்.

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்ததைப் போன்று, இடையூறுகள் ஏற்படுத்துவது ஒரு அரசியல் வியூகமாக மாறுமானால், அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும். நாடாளுமன்றம் என்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சுதந்திரத்தின் கோட்டையாகும்.

நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்ய போதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது, நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவரால் பின்பற்றப்பட்ட இந்த ஆரோக்கியமற்ற நடைமுறை, தீவிரமான விதிவிலக்காக இருக்க வேண்டும். இதற்கான ஆத்ம பரிசோதனைகளில் கட்சித் தலைவர்கள் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

விதி எண் 267 தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்துள்ள மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “இந்த விளக்கம் விதி எண் 267 குறித்ததாகும். உங்களது நலனுக்காக, விதி எண் 267 குறித்த எனது விளக்கத்தை, உங்களது பார்வைக்காக இன்று பதிவேற்றம் செய்துள்ளேன். இதில், உங்களது கவனத்தைத் தீவிரமாக செலுத்துமாறு, உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஏனெனில், இது அவையின் ஒவ்வொரு அமர்வின் போதும், தினசரி வழக்கத்தில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 36 ஆண்டுகளில், இந்த நடைமுறை 6 நிகழ்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அரிதான சூழல்களில் மட்டுமே இந்த நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

உங்களது நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக, அவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருவது, மிகவும் கவலைக்குரிய விவகாரம் என்பதை நான் வலியுறுத்தத் தேவையில்லை. நீங்கள் இன்று கொடுத்துள்ள நோட்டீஸ்கள், அவைத்தலைவரின் உத்தரவுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அவற்றை அனுமதிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், விதி எண் 267, ஆறு நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களிடமிருந்து நாள்தோறும் இது போன்ற எண்ணற்ற கோரிக்கைகள் வருகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறையாகவும், பழக்கமாகவும் மாறியுள்ளது. இது ஒரு கேலிக்கூத்தான அம்சமாக, தனக்குத்தானே தரம் தாழ்ந்துள்ளது. இது குறித்து நேற்று நான் மிகுந்த பொறுப்புடன் விளக்கம் அளித்த போதிலும், அது குறித்து யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்பதால், இதனை உங்களுக்கான இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன்” என ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.