கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமையான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 1991 ஜூலை தாராளமயமாக்கல் பட்ஜெட் இந்திய வரலாற்றில் முக்கியமான தருணத்தை குறித்தது. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார்.
அந்தத் தொலைநோக்குப் பார்வை நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது, மத்தியதர வர்க்கத்தினரை மேம்படுத்தியது, மேலும் லட்சக்கணக்கானவர்களை வறுமை மற்றும் விளிம்பு நிலையில் இருந்து உயர்த்தியது. நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் தூண்டி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் இந்த அற்புதமான சாதனையில் காங்கிரஸ் கட்சி பெருமிதம் கொள்கிறது.
இன்று மீண்டும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பின்தங்கியவர்கள் மேம்பாடு அடைய உதவும், அர்த்தமுள்ள வலுவான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தத்துக்கான ஓர் அவசரத் தேவை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “33 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மாற்றத்துடன் கூடிய நீடித்த வளர்ச்சி என்ற தத்துவத்துடன் தொகுக்கப்பட்ட பொருளாதார மாற்றத்துக்கு அது வழி வகுத்தது. கடந்த 1991 ஜூலை 24-ன் நிகழ்வுகள் மற்றும் பின்னணிகளை, To the Brink and Back: India’s 1991 Story என்பதில் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.