மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஜூலை 26-ம் தேதி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் விக்டோரியா கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, திமுக கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம், வடகோவையில் உள்ள, திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு கோவை மாநகராட்சி திமுக குழு தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் நா.கார்ததிக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் என 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் பேசும்போது, “முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகித்து செயல்பட்டு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் – புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதி களிலும் வெற்றியை தேடித்தந்தார். மாமன்றக் கூட்டத்தில் அதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேபோல், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த நாட்டுக்கான நிதிநிலை அறிக்கை போல் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. தமிழ்நாட்டின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இங்கு அறிவிக்கப்பட்ட மேற்கண்ட இரு தீர்மானங்களும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்” என்றார்.