திமுக ஆட்சியில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் மக்களவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக ஆலோசிக்கும் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தேனி மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, “2026 சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் யார் போட்டியிட்டாலும் அங்கு வெற்றிபெற முடியாத வகையில் நாங்கள் களப்பணி ஆற்றுவோம். அவர்கள் அங்கு எம்எல்ஏ-வாக ஆக முடியாது. வார்டு கவுன்சிலர் ஆக வேண்டுமானால் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பேசிய பழனிசாமி, “அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொகுதிகளில் நிர்வாகிகள் செய்ய வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய அளவில், கிளை அளவில் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி கூட்டங்கள் நடத்த வேண்டும்.
திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு, மற்றும் வரிகள் உயர்த்தியது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.