“பிரதமர் மோடியும் ஒரு சராசரி அரசியல்வாதியே என்பது நிரூபணம்” – கே.பி.முனுசாமி கருத்து

தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவே பிஹாருக்கும், ஆந்திராவுக்கும் பட்ஜெட்டில் பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ. தலைமை வகித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதன் பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ”மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ.15,000 கோடியும், பிஹார் மாநிலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடியும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள இந்த நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த நிகழ்வு மூலம் நாட்டின் பிரதமரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என நிரூபித்து உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது. இதன் வெளிப்பாடு தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தை ஆய்வு செய்வது போல், மக்களை ஏமாற்றுகிறார். உண்மையிலேயே ஈடுபாடு இருந்தால், ஆட்சிக்கு வந்த உடனே, இந்த திட்டத்தை மேம்படுத்தி இருக்க வேண்டும். அதனைவிடுத்து தற்போது விமர்சனம் வருவதால் ஆய்வு செய்கிறார். கூட்டுறவு துறையைப் பொறுத்தவரையில் மக்களுக்கு செல்லும் குடிமைப்பொருள் தங்கு தடையின்றி செல்ல ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் முறையாக செயல்படாததால் அதிகாரிகளால் முறையாக குடிமைப் பொருட்களை கொண்டு சேர்க்க முடியவில்லை. மத்திய அமைச்சருக்கு சாதாரண மக்களின் கஷ்டம் தெரிய வாய்ப்பு இல்லை. அதனால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்கிறார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது. 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளது. காவேரிப்பட்டணத்தில் நிப்பட் தயாரிக்கும் தொழில் செய்பவர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வாங்குகின்றனர். லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ய நேரடியாக மாமூல் வாங்கப்படுகிறது. குருபரப்பள்ளி ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட சாலையை, திமுக ஒன்றிய செயலாளரின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தடையாக உள்ளதால் சாலையை வெட்டி எடுத்துள்ளனர். இது தான் திமுக ஆட்சி. மேலும் அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கிராமத்துக்கும் ஒகேனக்கல் தண்ணீர் சென்றுவிட்டது, அதன்பின் வந்த ஆட்சியாளர்கள் அதனை மேம்படுத்தி முறைபடுத்தவில்லை.

மாநில அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறினால், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என மாநில அரசு கேட்கும். மத்திய அரசுக்கு ஜிஎஸ்டியில் வருமானம், மாநில அரசுக்கு பத்திரப்பதிவில் வருமானம். மத்திய நிதி அமைச்சர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சொல்வதற்கு முன்பு, அவர்கள் என்ன செய்து உள்ளார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசுக்கு வரும் வருவாயில் குறுக்கீடு செய்வது என்ன அர்த்தம். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு பொருட்களின் வரியை குறைக்க வேண்டும் என கேட்கிறோம் அதனை மத்திய அரசு செய்கிறதா. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு இடையே நல்ல சூழல் இல்லை” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.