“பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் (குர்சி பச்சாவோ) பட்ஜெட் இது. மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜக தனது கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் Copy, Paste செய்யப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.