ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் செந்திலுக்கும், வழக்கறிஞர் ஹரிஹரனுக்குமான பத்தாண்டு கால நட்பு குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும் விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ததன் விவரம், யார் யார் பணம் கொடுத்தார்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
வெவ்வேறு எண்களில் இருந்து இன்ஸ்டா, வாட்ஸ்அப் கால்களில் மட்டுமே தொடர்பு கொண்டு, ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான நபர்களை எப்படி ஒருங்கிணைத்து கொலையை எந்த சிக்கலும் இல்லாமல் கச்சிதமாக செய்ய வேண்டும் என ஆலோசனைகளை அவ்வபோது சம்பவம் செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சம்பவம் செந்தில் எங்கெங்கு தங்குவார்? அதேபோல தரை வழியாக அடிக்கடி நேபாளம் சென்று தங்குவதாக கூறப்படும் செந்தில் அங்கிருந்தபடியே, சமூக விரோத செயல்களுக்கான சதித்திட்ட ஆலோசனைகளை எப்படி வழங்குவார் என ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் செந்திலுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதேபோல் காவலில் எடுக்கப்பட்டுள்ள அருள், ராமு, பொன்னை பாலுவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சம்பவம் செந்தில் பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் ஒருவர் அவர் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.