மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், என்டிஏ கூட்டணியில் முக்கியக் கட்சியாக அங்கம் வகித்தும் சிறப்பு நிதியை மட்டுமே அவரால் பெற முடிந்திருக்கிறது” என்று சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்மாநிலத்துக்கு பல தொடர்ச்சியான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மாநில தலைநகரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கடந்த 2018-ம் ஆண்டு உயிரியியல் ரீதியாக பிறக்காத பிரதமர் மோடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற காரணத்துக்காக என்டிஏ கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார். இந்த நாடகம் அரங்கேறி ஆறு ஆண்டுகள் கழித்து, இந்த முறை தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கும் நிலையிலும், சந்திரபாபு நாயுடுவால் அமராவதிக்கான சிறப்பு நிதியை மட்டுமே பெற முடிந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு எக்ஸ் பதிவில் ஜெய்ராம், “ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டம் 2014-ல் உறுதியளிக்கப்பட்டதை செயல்படுத்த 10 ஆண்டுகள் ஆனது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திராவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல், போலாவரம் பாசனத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு உறுதுணையாக இருப்பதாகவும், நிதி உதவி அளிக்க தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் பின்னர் அமைந்திருக்கும் பாஜக தலைமையில் அமைந்துள்ள என்டிஏ கூட்டணி அரசில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய அங்கம் வகித்து வருகிறது. ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திராவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றன. சிறப்பு அந்தஸ்த்து என்பது மத்திய அரசால் மாநிலங்கள் அல்லது பிராந்திய பகுதிகளுக்கு வழங்கப்படும் பிரிவாகும். இதன்படி, அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரிச் சலுகை மற்றும் நிதியுதவி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.