மத்திய பட்ஜெட்டில் பிஹாருக்கு ‘சிறப்பு’ அறிவிப்புகள் – பாஜக எம்எல்ஏ மகிழ்ச்சி

2024-25-க்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பிஹார் மாநில வளர்ச்சி சார்ந்து கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதனை பிஹார் சட்டப்பேரவையின் பாஜக உறுப்பினர் தர்கிஷோர் பிரசாத் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

“பிஹார் மாநிலத்துக்கு மூன்று எக்ஸ்பிரஸ்-வே குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்ட பணிகளுக்காக ரூ.26,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இப்படி பிஹார் வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகள் மத்தியில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறப்பு அந்தஸ்தை அரசியல் அஸ்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். இது மாதிரியான போக்கு கூடாது” என தர்கிஷோர் பிரசாத் தெரிவித்தார். இவர் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை (ஜேடியு) கடுமையாக விமர்சித்தது. இந்த சூழலில் தான் பிஹார் வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.