புதுச்சேரி பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்

பட்ஜெட் கோப்பு அனுமதிக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போனில் முதல்வர் ரங்கசாமி பேசிய நிலையில் இன்று பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தல் வந்ததும் இதற்கு ஓர் காரணம். அதற்கு பதிலாக 5 மாதங்களுக்கான செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் முடிந்து, மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் ஜூன் 18-ம் தேதி மாநில அரசின் திட்டக்குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.12,700 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்றே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டுக்கான அனுமதி கிடைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதமானது.

பட்ஜெட் ஒப்புதலுக்காக முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திக்காதது தொடர்பாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டின.

இதனிடையே, பட்ஜெட் ஒப்புதல் தொடர்பாக தற்போதைய நிலை பற்றி அரசு உயர் அதிகாரிகளிடம் கூறியது: “பட்ஜெட் கோப்பு மத்திய நிதி அமைச்சகத்திடம் உள்ளது. இதற்கு அனுமதி கிடைக்க 3 வாரங்கள் ஆகும். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அது மத்திய உள்துறையின் அனுமதிக்கு செல்லும். அங்கு ஒரு வாரக்காலம் அவகாசம் எடுக்கும். மேலும், புதுச்சேரி அரசு பட்ஜெட் கோப்பு அனுமதி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதல்வர் ரங்கசாமி போனில் பேசியுள்ளார்” என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், பட்ஜெட் ஒப்புதலுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் தந்துள்ளது. சட்டப்பேரவை செயலக வட்டாரங்களில் தகவலின்படி, “தற்போதுள்ள சூழலை கருத்தில்கொண்டு வரும் ஜூலை 31-ல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.