“மின் கட்டணத்தை உயர்த்திய திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: “தமிழகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரிதிநிதிகள், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. போதைப்பொருளின் தலைமையகமாக தமிழகம் மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களால் கூலிப்படைகளாக மாறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. திமுக ஆட்சியில் கூலிப்படை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை என பிஹார், உத்தரப் பிரதேசம் போல தமிழக மாறிவிட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. திமுக ஆட்சியில் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சாமானியர்கள் முதல் சிறு, குறு விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.
இந்த அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் மும்முனை மின்சாரமோ, இலவச மின்சாரமோ வழங்கவில்லை. மின்சாரத்தை ஒழுங்காக விநியோகிக்க முடியாத அரசு மின் கட்டணத்தை எதற்கு உயர்த்துகிறது. இவர்களின் நிர்வாக திறமை இன்மையால் ஏற்பட்ட கடனை மக்கள் மீது சுமத்துவதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழி போடுகிறது. இந்த ஆட்சியில் நடப்பதெல்லாம் ஊழல்கள், முறைகேடுகள் தான்.
2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம். எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருப்பதால் திமுக எளிதில் வெற்றி பெற்று வருகிறது. அதை 2026 தேர்தலில் மாற்றி காட்டுவோம். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்பட்டுவிடும், சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும் என்று மக்கள் இப்போது அஞ்சி வருகின்றனர். திமுக கூட்டணி வலுவான கூட்டணி என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கூட்டணியை தாண்டி நமக்கு தமிழக மக்கள் வெற்றியை வழங்குவார்கள். மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு 2026-ஆம் ஆண்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவோம் என இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுதி ஏற்போம்” என்று டிடிவி தினகரன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கரிகாலன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.