“ரேஷனில் விரைவில் இலவச அரிசி வழங்கப்படும். ஆளுநரின் ஒப்புதல் பெற்றுள்ளோம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி கமிஷன் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முதல்வர் மறுத்து விட்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி இன்று பேசியது: “பள்ளிகளில் மாலையில் சிறுதானிய உணவும், காலையில் ரொட்டி பால் தருகிறோம். முன்பு பழம் தந்தோம். தற்போது பழம் தரும் எண்ணம் உள்ளது. சிறுதானிய உணவுடன் கடலை மாலையில் தர எண்ணம் உள்ளது. குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ முடியும். மருத்துவர்களிடம் செல்வது குறையும். பழங்கள் சாப்பிடுவது நல்ல பழக்கம்.
தற்போது பழக்கடைகள் அதிகரித்துள்ளன. சிறுதானியத்தில் நல்ல சத்து உள்ளது. சத்தான கம்பு, கேழ்வரகு சாப்பிடுவதை விட்டுவிட்டோம். தற்போது மீண்டும் சாப்பிட தொடங்கியுள்ளனர். சத்துக்காக கொரோனாவுக்கு பிறகு தினமும் 2 முட்டை பலரும் சாப்பிடுகின்றனர். நல்ல ஆரோக்கிய உணவு அவசியம். அரசு மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இலவச அரிசி ரேஷனில் விரைவில் வழங்கப்படும். சொன்னதுபோல் தருவோம். கூடுதலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம். அரிசி டெண்டர் போட்டுதான் தரமுடியும். அதன் பிறகு தெரிவிக்க முடியும். ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத் துறை டான்பெட் மூலம் தரவும் திட்டமிட்டுள்ளோம். சுகாதாரத் துறையானது நிபா வைரஸ் வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்” என முதல்வர் கூறினார்.
நிதி கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, முதல்வர் பதில் அளிக்கவில்லை. மீண்டும் நிருபர் அக்கேள்வி கேட்டதற்கும் அவர் பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.