2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், 2023-24 (ஏப்ரல் 2023- மார்ச் 2024) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, 2024 – 25-ம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், “உலகளாவிய பொருளாதார செயல்திறன் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதிலும், வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. 2024-ம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி ஊக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர் மற்றும் மோதல் போக்குகளின் தாக்கம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் எதிரொலித்தது.
நாட்டின் குறுகிய கால பணவீக்கத்தால் பாதிப்பு இல்லை. எனினும், பருப்பு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட விலை உயர்வால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலைவாசியின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.