மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரிப்பு : நீர்மட்டம் 75 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.80 அடியில் இருந்து, இன்று 75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்கிய துணை நதியான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது. இதையடுத்து, கபினி அணையிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது.

இதேபோல் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ளன கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீர் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.

அணைக்கு நேற்று வினாடிக்கு 53,830 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக , நேற்று 69.80 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் , இன்று 75 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது.