கோவையில் ஆம்னி பேருந்தில் திடீர் தீ – ஓட்டுநர் சாதுரியத்தால் உயிர்தப்பிய பயணிகள்

திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த ஆம்னி பேருந்தில் திடிரென தீப்பற்றி எரிய தொடங்கியது. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் கீழே இறங்கி உயிர்தப்பினர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்னி பேருந்து கோவை – திருவண்ணாமலை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து இன்று அதிகாலை கோவைக்கு வந்தது. அவிநாசி சாலை வழியாக கோவை காந்திபுரம் நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது.

அவிநாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகே ஆம்னி பேருந்து வந்தபோது, அதன் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து, சிறிது நேரத்தில் தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்தவுடன் சுதாரித்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கினர். பயணிகள் அனைவரும் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவியது.

இது குறித்து தகவலறிந்த பீளமேடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். எனினும், தீயில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தொடர்ந்து மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் காந்திபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.